2008 – இணையக் கட்டுரைகள்
Saturday, 27. December 2008
1. எனது இந்தியா – ஜெயமோகன்
போன வருஷமே ஆரம்பித்திருந்தாலும் சிவாஜி எம்ஜிஆரை பற்றிய விமர்சனத்திற்குப் பின்னர் ஜெ.மோவின் பதிவுலகம் சூடேறியது. இணையவாசிகள் மட்டுமல்லாது மீடியா தரகர்களுக்கும் அவ்வப்போது அவல் கிடைத்தது. பயணம், அரசியல், இலக்கியம், சினிமா, இசை, நையாண்டி என விதவிதமான பதார்த்தங்கள் தினமும் கிடைத்தன. இறால் பண்ணையை எதிர்த்துப் போராடிய கிருஷ்ணம்மாள் பற்றிய விஷயங்கள் மாயவரம் மாபியாவுக்கே தெரியாதவை. ராஜ்தாக்கரேவின் அரசியல் பாணியை அலசிய கட்டுரை நினைவில் இருக்கிறது. ஆனாலும் பெஸ்ட் ஆப் த இயர் என்னவோ எனது இந்தியாதான்.
2. மும்பை தாக்குதல் – ஞாநி
ஞாநி அவ்வப்போது சறுக்கி விழுந்தார். கருணாநிதி ரிடையராக வேண்டிய கேஸ் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தையே அவரும் எழுதியது அவரது வித்தியாசமான பார்வையில் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம். திருக்கடையூரில் ஜெயலலிதா சசிகலா சகிதம் சாமி கும்பிட்டது பெரியார் பக்தருககு எரிச்சலைக் கிளப்பியிருக்கலாம். அதற்காக கோபத்தில அவர் எழுதியதெல்லாம் அபத்தத்தின் உச்சம். ஆனாலும் வருஷக் கடைசியில ஒரே ஒரு சூப்பர் ஹிட் கொடுத்து முன்னுக்கு வந்துவிட்டார். மும்பை தாஜ் மீதான தாக்குதல் பற்றிய கட்டுரையும் சரி அதைத்தொடர்ந்த விவதாங்களும் சரி ஞாநி ஞாநிதான் என்று சொல்ல வைத்தது. எல்லாத்துக்கும் காரணம் அயோத்தியில மசூதியை இடிச்சதுதான் என்று சொதப்பினாலும் ஞாநியை யாரும் நிராகரிக்க முடியாது.
3. ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிகூத்து – பத்ரி சேஷாத்ரி
இலங்கை பிரச்னை பற்றிய உருப்படியான பதிவு. நாட்டு நடப்புகளை தொடர்ந்து இணையத்தில் எழுத பத்ரியை விட்டால் வேறு ஆள் ஏது? போன வருஷத்தில் ஆரம்பித்த அணு ஆயுதப் பிரச்சாரத்தை இந்த வருஷமும் தொடர்ந்தார். அழகிரிக்கும் மாறன் குடும்பத்திற்கான இடையேயான தொழில்போட்டி பற்றிய விஷயம் முழமையாக இல்லாவிட்டாலும் முக்கியமான பதிவு. ஸ்பெக்ட்ரம், சந்திராயன் வார்த்தைகளுக்கான அர்த்தம் பத்ரியிடம் விரிவாக இருந்தது. அவ்வப்போது அறிவியல் புதிர் சொல்லி, அம்புலிமாமா கதைகளெல்லாம் எழுதி போரடித்தாலும் முக்கியமான நிகழ்வுகளை தவறவிடவில்லை.
4. தாத்தாவுக்கு பேரன் பதில் – இட்லி வடை
பாடிகாட் முனீஸ்வரன் இந்த வருஷம் பார்மில் இல்லை. இட்லிவடையில் சத்தம் இருந்த அளவுக்கு சரக்கு இல்லை. ஏகப்பட்ட இல்லைகள் இருந்தாலும் அரசியல் நையாண்டிக்கு இட்லிவடையார்தானே இணைய துக்ளக். தாத்தாவுக்கு பேரனும், பேரனுக்கு தாத்தாவும் பதில் சொன்ன விபரங்களோடு வந்த புது எலாஸ்டிக் இல்லாத ஜட்டி சுவராசியமாக இருந்தது. செய்தி விமர்சனத்திற்கும் செய்திவிமர்சனத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக (?) சைடு பார் காட்டுவது போலவே சின்னச் சின்ன வார்த்தைகளில் ஏகப்பட்ட விஷயங்களை சொல்லும் ஸ்டைல் இந்த வருஷமும் தொடரப்பட்டது.
5. விஜயகாந்த் அவர்களே.. கவனமாய் வாய் திறக்கவும் – ஆதவன் தீட்சண்யா
கீற்று என்னும் குப்பையை அவ்வப்போது கிளறிப்பார்ப்பதுண்டு. அப்போது சிக்கியதுதான் இந்த பதிவு. விஜயகாந்தை வசைபாடும் வழக்கமான விஷயமென்று அசுவராசியமாய் பேஜ்டவுணை அழுத்தியபோதுதான் வேறு ட்ராக் என்பது தெரிந்தது. வி.பி.சிங் பற்றிய இந்தியா டூடேவின் கட்டுரையை வெளியிட்டு ஏதோதோ சொல்லியிருந்தாலும் ஆதவன் தீட்சண்யா விஷயதானி. தேசப்பிதாவாக இருக்க தகுதியானவர் காந்தியா அம்பேத்கரா ரக கேள்விகளெல்லாம் அவரது கீற்று விவாதங்களில் ஆங்காங்கே வந்து விழுகிறது. லாஜிக் இல்லாத விவாதமாக இருந்தாலும் நிராகரிக்க முடியாது, வடிவேலுவின் காமெடியைப் போல.


