புத்தகக் கண்காட்சி 2009

Monday, 19. January 2009

எந்தவித பரபரப்புமில்லாமல் புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. குட்டி ரேவதி காலமெல்லாம் ஓவர். போன வருஷத்தை விடவும் இந்த முறை மக்கள் கூட்டம் குறைவு. ஆனாலும் காண்டீனில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு சாயங்காலங்களை செலவழிக்க சௌகரியமான இடம் தேவையாய் இருக்கிறது. புத்தகங்களை புரட்டிப் பார்த்தவர்கள் கூட குறைவாகவே இருந்தார்கள். இந்த முறை எழுத்தாளர்கள் கூட்டமும் இல்லை. இதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சிதான் காரணமோ என்னவோ?!  

[singlepic=52,600,450,,left]

வாங்கும் மக்களின் ரசனையும் மாறியிருந்தது. பிஸினெஸ் புத்தகங்களாக வாங்கி குவித்தவர்களெல்லாம் இந்த வருஷம் பிரச்னைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். பிரிவினை, போராட்டம்தான் ஹாட் டாக் லைன். குட்டிக் குட்டியாய் இருக்கும் சீரியஸ் புத்தகங்கள்தான் பெரும்பாலானவர்களின் இலக்கு. 300 பக்க புத்தகத்தை விட பத்தாக பிரித்து 30 பக்க புத்தகமா வெளியிட்டால் சேல்ஸ் எகிறுகிறது. ஈழம், சேகுவாரா, மார்க்ஸ், மாவோ, அரவாணிகள், இந்துத்வா, பெரியார், அம்பேத்கார், பின்நவீனத்துவம், கம்யூனிஸம், நாஞ்சில், திராவிடம் வார்த்தைகள் இல்லாத புத்தகங்களோ, பதிப்பகங்களோ கிடையாது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு யாராவது புரட்சி செய்வதாக இருந்தால் தேறமாட்டார்கள். 

வாசலில் பத்து ரூபாய்க்கு சூடான பாப்கார்ன் கிடைத்தது. பகுத்தறிவு புத்தகங்களை நோண்டிவிட்டு வெளியே வரும்போது முதுகில் ஐஸ்கீரிமால் யாரோ ஒத்தடம் கொடுத்திருந்தார்கள். அகில இந்திய வானொலி கடையில் அநியாய விலைக்கு சிடியை பரப்பியிருந்தார்கள். அதை சாவகாசமாக பார்த்துக்கொண்டே ஒருவர் குளிர்பானத்தை உள்ளே தள்ளியது வேடிக்கை.  கீழைக்காற்று, விடியல் போன்ற கடைகளைவிட்டு வெளியே வரும்போது டீ ஸ்டாலை தேடினேன். கிடைக்கவில்லை.

பிரசன்னாவின் ஐடியாவை பப்பாஸி கொஞ்சம் சீரியஸாகவே பரிசீலிக்கலாம். கூடுவே இன்னும் சில கோரிக்கைகள்.  வரிசை பிரிப்பதில் குலுக்கல் முறை ஒத்து வராது. வருஷா வருஷம் பெருகி வரும் சாமியார்களின் மார்க்கெட்டிங் வேலைகளுக்கு தனியிடம் ஒதுக்கலாம்.  புரட்சி, பகுத்தறிவு கோஷ்டிகளுக்கும் தனியிடம்.  இதையெல்லாம் செய்தால் அரைமணிநேரத்தில் ஷாப்பிங்கை முடித்துவிடலாம்.

நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானைகள் கடைசிவரை கிடைக்கவேயில்லை. சுஜாதாவின் சில நாவல்களும் கிடைக்கவில்லை. கரமுண்டார் வீட்டை தேடி ஓய்ந்து போனேன். ஆனாலும் தஞ்சை பிரகாஷ் பற்றிய புத்தகம் கிடைத்தது ஆறுதல். தீம்தரிகிடவில் பாரதியை காணவில்லை. ஞாநி வியாபார காந்தமாகிவிட்டார். ஆட்டோகிராப் எல்லாம் அள்ளிவிடுகிறார். அவ்வப்போது கிழக்கிற்கும் வந்து எட்டிப்பார்க்கிறார். ரொம்ப வருஷங்களுக்குப் பின்னர் எம்.எஸ் உதயமூர்த்தியை பார்க்க முடிந்தது. இருபது வருஷமாக அப்படியே இருக்கிறார். உயிர்மை வாசலில் சாருவும், தமிழ்ச்சி தங்க பாண்டியனும் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

இந்த முறை எஸ்.ராவின் புத்தகங்களோடு வீட்டுக்கு வராதது சங்கரிக்கு ஆச்சர்யம். கிழக்கிலும் உயிர்மையிலும் சாவகாசமாக புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாமே என்கிற எண்ணம்தான். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இன்னும் கொஞ்சம் வாங்கலாம். இப்போதைய கவலை, வாங்கிய புத்தகங்களை மஹதியிடமிருந்து காப்பாற்றுவதுதான்.

அம்மா வந்தாள் – தி.ஜா, எப்போதோ படித்தது. இப்போது படிக்க நினைத்ததால்.

காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம், காந்திக்காக.

கோமாதா அரசியல் – அருணன்,  தகவலுக்காக.

கோட்சேயின் குருவமார்கள் – அருணன், காந்திக்காக.

பள்ளிக்கொண்டபுரம் – நீலபத்மநாபன், பிரசன்னாவில் சிபாரிசு.

நிழல் முற்றம் – பெருமாள் முருகன், எஸ்.ராவின் சிபாரிசு

நகரம் – சுஜாதா,  

மீண்டும் ஜினோ – சுஜாதா

என் இனிய இயந்திரா – சுஜாதா

கதையின் தலைப்பு கடைசியில் இருக்ககூடும் (ஆதவன் தீட்சண்யா கவனிக்க, க் இல்லை!)

சேதுக்கால்வாய்த்திட்டம் – குமரன்தாஸ், தகவலுக்காக

காலச்சுவடு பழைய இதழகள், தவறவிடக்கூடாத ஸ்பெஷல்கள்.

இரும்புக்குதிரைகள் – பாலகுமாரன், பத்தாங்கிளாஸ் லீவில் படித்தது.

எசப்பாட்டு – ஆனந்த் நடராஜன், போன வருஷமே வாங்க நினைத்தது.

முட்டம் – சிறில் அலெக்ஸ், முட்டம் பற்றிய நினைவுகளுக்காக.

கீரைகள்,  சங்கரி ஸ்பெஷல்

சர்க்கரை நோயாளிக்களுக்கான உணவு முறைகள், அம்மாவுக்காக

எல்லோருக்கும் குழந்தை சாத்தியம்

இந்திரா காந்தியின் ஆங்கில உரைகள்

ஆச்சார்யா வினோபா பாவே

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜெ.பி

தென்கிழக்கு ஆசிய வரலாறு

கைதானால் உங்கள் உரிமைகள்

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 

கோனார் தமிழ் அகராதி, எனக்காக

பாரதியார் கவிதைகள், மஹதிக்காக

Comments are closed.