எஸ். ரா புத்தக விழா

Monday, 14. December 2009

பிலிம் சேம்பர் களைகட்டுகிறது. கூட்டம் முடிவதற்குள்ளாகவே அடுத்தக் கூட்டத்திற்கு காத்திருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சி ஆரம்பிப்பதற்குள் இன்னும் நிறைய கூட்டங்களை எதிர்பார்க்கலாம். ஆறரை மணிக்கு மேல் நான்கடி பேனரை கட்டி, சாவகாசமாக ஆரம்பிக்கிறார்கள். எங்கிருந்தோ வரும் கூட்டம் அரங்கை நிறைத்து, நிறைய பேரை கால் கடுகக நான்கு மணி நேரம் நிற்க வைக்கிறது.

ஞாயிறு மாலை. எஸ்ராவின் நான்கு புத்தகங்களை வெளியிட உயிர்மை வட்டாரமே திரண்டு வந்திருந்தது. நேற்றிலிருந்து விழா மேடையிலேயே தங்கியிருக்கும் உணர்வில் இருப்பதாக பேச்சின்போது எஸ்ரா குறிப்பிட்டார். புத்தகங்களைப் பற்றி பேச்சாளர்கள் அல்லாத விஐபிக்கள் விபரமாக பேசினார்கள். திமுகவுக்கு அன்பழகன் போல இலக்கியக்கூட்டங்களுக்கு பிரபஞ்சன். பேச்சில் வழக்கம்போல் சுவராசியத்தை தவறவிடவில்லை.

ஸ்டார் பேச்சாளர் ஞாநிதான். லேட்டாக வந்து அதே டென்ஷனோடு பேசினார். ரொம்பப் பேசறீங்க என்று ஞாநி பற்றி அசோகமித்திரன் சொன்னாராம். ஞாநி வழக்கத்தை விட காட்டமாக நிறையவே பேசினார். இலக்கியவாதிகள், சினிமாவுக்கு வந்து ஒன்ணும் பிடுங்க முடியாது என்றார், சீமான் ஸ்டைலில். ஜெயகாந்தனால் சொந்தப் படமெடுத்து சின்ன சலனத்தை மட்டும் உண்டாக்க முடிஞ்சது…உங்களால் என்ன செய்ய முடிந்தது?  உன்னைப் போல் ஒருவனில் பாட்டெழுதியிருக்கிறதா சொன்னாங்க.. என்னாச்சு என்றெல்லாம் ஹைபிட்சில் ஞாநி பேசிக்கொண்டே போக, மனுஷ்யபுத்திரனின் ரீயாக்ஷனில் வடிவேலுவின் யாருக்கோ ஸ்டைல் தெரிந்தது.

சினிமாவுக்கு எழுதறது மட்டுமல்ல எஸ்ரா கட்டுரை எழுதறதையும் நிறுத்தணும் என்று சாமியாடிவிட்டுதான் ஓய்ந்தார் ஞாநி.  ஞாநியின் அரசியல் சரவெடியை மேடையிலிருந்த ஐஏஎஸ் அதிகாரி தவிர மற்றவர்களெல்லாம் ரசித்து சிரித்தார்கள். ஞாநியின் உரை பற்றி ஏற்கனவே எழுதப்பட்ட தொகுப்பாளினியின் ஸ்கிரிப்ட், படு பொருத்தமாக இருந்ததில் ஆச்சர்யமில்லை. பின்னர் பேச வந்த எஸ்ரா, அது வேறு, இது வேறு. எழுத்து அர்ப்பணிப்பு, சினிமா பிழைப்பு என்று வெளிப்படையாக பேசி கைதட்டல் வாங்கிக்கொண்டார். கடைசியாக சொன்ன அந்தக் குட்டித் தவளைகள் கதை டச்சிங்.

பின்குறிப்பு:  சாருவை ரஜினியோடு ஒப்பிட்டு நேசகுமாரே அருள்வாக்கு சொல்லியிருப்பதாக சுரேஷ் கண்ணனும் ஒரு அருள்வாக்கு வழங்கியிருக்கிறார். நேற்று நடந்த சாருவின் விழாவில் பங்கேற்று இலக்கியப் போதையேறிய பின்னர் சுரேஷ் கண்ணன் எழுதியதில் இருக்கும் திண்ணைச் சுட்டியோ ஜெயமோகன் பற்றி ஏதோ சொல்கிறது. ரஜினியா, கமலா, ஜெயமோகனா, சாருநிவேதிதாவா யாரை யாரோடு யார் ஒப்புடுகிறார்கள் என்பதை சுரேஷ் கண்ணனோ அல்லது நேசகுமாரோ விளக்குவார்கள் என்று நம்புவோமாக.

[singlepic=96,320,240,,left][singlepic=95,320,240,,right]

[singlepic=94,320,240,,left][singlepic=93,320,240,,right]

Comments are closed.