Follow up – தென்னாடுடைய சிவன்
Wednesday, 23. December 2009
முள், செடி கொடிகள் மண்டிப்போய் காடு போல் காட்சியளிக்கும் இந்தக் கோவிலை கண்டுகொள்வாரில்லை. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்று கேள்விக்குறியை சேர்த்து, சம்பிரதாய வார்த்தைகளைக் கோர்த்து தினமணியில் எழுதியிருந்தால் கூட ஏதாவது நடந்திருக்கும். நான்கு வருஷங்கள் ஓடிவிட்டன. நிலைமை இப்போது முன்பை விட மோசம்.
2005ல் வெறும் ரிப்போர்ட்டாக எழுதியபோது வந்த பின்னுட்டங்கள், இமெயில் விசாரணைகள் இந்த விஷயத்தில் ஏதாவது செய்ய வேண்டும என்கிற எண்ணத்தைக் கொடுத்தன. அறநிலைய ஆட்சித்துறையின் சுறுசுறுப்பு பின்னாளில் அந்த எண்ணத்தையே கெடுத்தன. 2006ல் முதல் முதலாக அறநிலையத்துறைக்கு முதல் லவ் லெட்டர் அனுப்பப்பட்டது. எந்த லவ் லெட்டருக்கு பதில் வரும்? அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில் வரவில்லை. தருமபுர ஆதீனத்தில்தான் விசாரிக்க வேண்டும் என்றார்கள். பழைய ஆபிஸ் பக்கத்தில் இருந்ததால் அவ்வப்போது அலைய முடிந்தது. நுங்கம்பாக்கத்திலும் தருமபுரத்திலும் மேற்கொண்ட அடுத்த கட்ட விசாரணைகளில் இரண்டு தரப்புமே ஒன்றையொன்று கைகாட்டின.
2009. புத்தகக் கண்காட்சியில் எம்.எஸ். உதயமூர்த்தியின் கைகளால் பெற்றுக்கொண்ட தகவல் பெறும் உரிமைச்சட்டம் புத்தகத்தையும் பணயம் வைத்து பரீட்சித்து பார்த்தேன். இந்த முறை இணையத்தில் எழுதியதை பிரிண்ட் எடுத்து, போட்டோ சகிதம் பத்து ரூபாய் கோர்ட் பீஸ் ஸ்டாம்போடு இன்னொரு லவ் வெட்டர். வழக்கம் போல் பதில் இல்லை.
கஞ்சாநகரம், மேலையூர் பஞ்சாயத்து யூனியன், மயிலாடுதுறை என்றெல்லாம் சுற்றி வந்தும் எந்தப் பலனுமில்லை. வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே கோயில் திறக்கப்படுகிறது எனகிறார் உள்ளுர்காரர். பிள்ளையாரின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. இனி என்ன செய்வதென்று தெரியவில்லை.
தென்னாடுடைய சிவன் – முந்தைய பதிவு
பின்குறிப்பு : அறநிலையத்துறையிலோ அல்லது தருமபுரம் ஆதீனத்திலோ யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். Ramkij@gmail.com. விதி வலியது. இன்னொரு லவ் லெட்டர் அனுப்பலாம் என்கிற முடிவில் இருக்கிறேன்.


