எமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்

Tuesday, 29. December 2009

போனவாரம் நள்ளிரவில் வீடு திரும்பி, டிவி பார்ப்பதை தவிர்த்து, சீனாவின் ஏற்றுமதி பற்றிய ராஜீவ் குமாரின் மிண்ட் கட்டுரையை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன். எழுதி பிளாக்கில் போடுவதாக கூட உத்தேசமில்லை. ஆனாலும் 80 சதவீதம் வரை எழுதி முடித்துவிட்டுதான் மறுவேலை. மொழிபெயர்ப்பு பித்து ஏனோ உச்சத்தில் இருக்கிறது.

மொழிபெயர்ப்பு அல்லது தமிழாக்கத்தில் சில சௌகரியங்களும், அசௌகரியங்களும் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் தாண்டி, தனிப்பட்ட வகையில் சாதகமான அம்சங்கள் நிறையவே இருப்பதை ஒரு வருஷ காலம் யோசித்துப் பார்த்த பின்னரே கண்டு கொண்டேன். தமிழாக்கம், மொழியாக்கம், தழுவல் என ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் ரீமேக், டப்பிங் மட்டுமே.

JP in Jail தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நேரடி தமிழ்ப் புத்தகத்திற்கான உழைப்பு இதில் கொட்டப்பட்டிருக்கிறது. வாய்ப்பு கொடுத்த பத்ரிக்கு நன்றி. ஒரு வருஷ காலம் வரை என் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தமைக்கு அதை விட பெரிய நன்றி.

எமர்ஜென்ஸி பற்றி எழுதுவதென்பது என்னுடைய ஆதர்ச கனவு. தமிழ்நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு, எமர்ஜென்சி தீவிரமடைந்த அதே நாளில் பிறந்த காரணத்தால் கூட இருக்கலாம். எமர்ஜென்சிக்குப் பின்னர் பிறந்தவர்கள் நிறைய எழுத வேண்டும் என்று மாலன், மு.க புத்தக அறிமுக விழாவில் பேசியதும் ஆசை உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது. இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதைக்கு ஜெபியின் ஜெயில் வாசம். இன்னும் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது.

ஜெபியின் ஜெயில்வாசம், எமர்ஜென்ஸியின் பின்புலத்தில் பல தலைவர்களின் நிஜ முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. இதில் ஜேபியும் உள்ளடக்கம். எமர்ஜென்ஸி பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இதிலிருந்து படிக்க ஆரம்பிக்கலாம். இதில் இன்னொரு பின்புலமும் உண்டு. அரசியல் நெருக்கடிகளின்போது அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி யாரும் பேசுவதில்லை. எமர்ஜென்ஸி போன்ற குழப்பமான நேரத்தில் அதிகாரிகள் வட்டாரம் எத்தகைய நெருக்கடிக்கு ஆளாகிறது, அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்பதும் புத்தகத்தின் இன்னொரு ஹைலைட்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்

பிரதமரின் உரையைக் கேட்டு முடித்தபின் நானும் பனோத்தும் அங்கிருந்து கிளம்பி சரியாக 9.15-க்கு விமான நிலையத்தைச் சென்றடைந்தோம். அங்கே நிலைய கமாண்டரும், ஏர் கமோடர் பாஷின், அவரது சக கமாண்டர் நந்தா ஆகியோரும் தயாராக இருந்தனர். தனி விமானத்தில் யார் வருகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாததால், விஷயத்தை எடுத்துச் சொன்னோம். விமானம் இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டது. விமான ஓடுதளத்தின் அருகிலேயே ஜெபிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தோம். நிமிடங்கள் கரைய ஆரம்பித்தன.

சரியாக 10.35 மணிக்கு அந்தத் தனி விமானம் தரை இறங்கியது. டெல்லி காவல்துறைக் கண்காணிப்பாளர் முதலில் கீழே இறங்கினார். ஜெபி கைது பற்றிய ஆவணங்களை சண்டிகர் காவல்துறையிடம் கொடுத்தார். அதை அடுத்து, சோர்ந்து போன முகத்தோடு, தள்ளாடியபடியே ஒரு வயதான மனிதர் விமானத்தில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தார். ஜெபி! அவரை அருகே நெருங்கி, கைகுலுக்கிவிட்டு, என்னை நானே அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்கூட வந்திருந்த மற்ற அதிகாரிகளையும் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். ஆனால், ஜெபி சோர்வாக இருந்தார். வெறுமனே தலையாட்டிக்கொண்டார்.

நாங்கள் கொண்டுவந்திருந்த காரை ஓடுதளத்துக்கே வரவழைத்து அதில் ஜெபியை அமரச் சொல்லிவிட்டு டிரான்ஸ்பர் வாரண்ட்டை (டி -1) தயார் செய்து டெல்லி காவலர்களிடம் கொடுக்க நகர்ந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது ஜெபி காரில் ஏறாமல் வெளியே நின்றுகொண்டிருந்தார். கார் கதவு திறந்தே இருந்தது. இரண்டு பெட்டிகள் கொண்ட தன்னுடைய லக்கேஜ் பத்திரமாக வந்து சேர்ந்ததா என்பதைத்தான் விசாரித்துக் கொண்டிருந்தார். டெல்லி சப் இன்ஸ்பெக்டர் அந்த இரு பெட்டிகளையும் ஜெபியிடம் காட்டிச் சரிபார்த்துவிட்டு காரில் ஏற்றி வைத்தார். ஜெபி ஏறியதும் கார் பி.ஜி.ஐ கெஸ்ட்ஹவுஸை நோக்கி விரைந்தது. கெஸ்ட்ஹவுஸ் வந்து சேரும்போது மணி இரவு 11.

சண்டிகர் சிறைச்சாலை கண்காணிப்பாளராக இருந்த எக்சிக்யூடிவ் மாஜிஸ்திரேட் மொஹிந்தர் சிங், உதவிக் கண்காணிப்பாளராக இருந்த ஆர். டி. சர்மா, மற்ற சிறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டத்தைக் கூட்டினேன். பி.ஜி.ஐ கெஸ்ட்ஹவுஸை சிறைச்சாலையாக அறிவிக்கும் உத்தரவுகளை முறைப்படி அவர்களிடம் கொடுத்து, உடனே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அன்று மாலை நடந்த கூட்டத்தில் குப்தா ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார். ஜெபியை கெஸ்ட்ஹவுஸில் தங்க வைத்தபின் ஹரியானா முதல்வருக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும் என்பது டெல்லி தர்பாரின் உத்தரவாம். வீட்டுக்குத் திரும்பியதும் என் மனைவி, முதல்வர் பன்சிலாலிடம் இருந்து போன் வந்ததாகத் தெரிவித்தார். வீடு திரும்பியதும் உடனே அவரைத் தொடர்புகொள்ள வேண்டுமாம். தொலைபேசியை எடுத்து எண்களைச் சுழற்றினேன். மறுமுனையில் பன்சிலால்தான் இருந்தார். இந்தியில் கொச்சையாக, அதே சமயம் ஆவேசமாகப் பேசினார்.

‘அந்த ஆளு பெரிய ஹீரோன்னு நினைச்சிட்டிருக்கான். அவன் அங்கேயே கிடக்கட்டும். அவனை யாரும் பார்க்கக்கூடாது. யாருக்கும் போன் கூட பண்ண விடக்கூடாது. அவன் கதை அங்கேயே முடியணும்’

புத்தகம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு

பத்ரியின் அறிமுகம்

என்னுடைய மற்ற புத்தகங்கள்

Comments are closed.