புத்தகக் கண்காட்சி – படித்தவை
Monday, 4. January 2010
[singlepic=123,320,240,,left]
இம்முறை பட்ஜெட் கம்மி. பர்ஸ் வத்தலாகத்தான் இருககிறது. ரெசெஷன் இன்னும் முடியவில்லை. புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில் கறாராக நடந்து கொள்வது என்று போன மாதமே தீர்மானம் நிறைவேற்றியாகிவிட்டது. ஆனாலும் கடைசி நேர கண்சிமிட்டல்களில் சிக்கி, இந்தமுறையும் இழப்புகள் நிறையவே இருந்தன. உதாரணத்திற்கு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மழலைக் கல்வியை விளக்கும் பாடாவதி சிடி!
இனி வாங்கிய/வாங்கப்போகும் புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்.
நகுலன் வீட்டில் யாருமில்லை, எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம் : குறுங்கதைகள் பற்றிய அறிமுகம் சுஜாதாவின் மூலமாகக் கிடைத்தது. பல கதைகளை வாசித்து, சில கதைகள் முயற்சித்து, நமக்கு சம்பந்தமில்லாத ஏரியா என்று முடிவு செய்திருந்த நேரத்தில்தான் எஸ்.ராவின் முன்னோட்டம் வந்தது. குறுங்கதைகளை ரசிப்பவர்களுக்கு இது முக்கியமான புத்தகம்.
இன்றைய காந்தி, ஜெயமோகன், தமிழினி பதிப்பகம் : காந்தி பற்றி எழுத ஜெமோவை விட்டால் வேறு ஆளில்லை. காந்தியைப் பற்றிய சந்தேகங்கள், புரளிகள், விமர்சனங்களை அடியோடு மறுக்காமல், அது தொடர்பான விளக்கங்களையும், உப கேள்விகளையும் முன்வைப்பது புத்தகத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட்.
ராஜீவ் கொலை வழக்கு, ரகோத்தமன், கிழக்கு பதிப்பகம் : இந்த வருஷத்தின் பரபரப்பான அரசியல் ஆவண புத்தகம். சொல்ல வந்ததை, பளிச்சென்று தடலாடியாக சொல்கிறது. ரகோத்தமன், போன ஜென்மத்தில் வழக்கிறிஞராகவோ, எழுத்தாளராகவோ, பேச்சாளராகவோ பிறந்திருக்கலாம். இரண்டரை மணிநேரம் வாசகர்களுடன் நின்றபடியே உரையாடுவது எவருக்குமே அசாத்தியமானது.
மாவோயிஸ்ட், பா. ராகவன், கிழககு பதிப்பகம்: நீண்ட நாட்களுக்கு பிறகு பா.ரா இந்தியாவுக்கு திரும்பியிருக்கிறார். மூன்று மாதங்களாக டெல்லி சானல்கள் விரட்டிப் பிடிக்கும் தலைப்புச் செய்தியை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இதுவரை எனக்கு வந்ததில்லை. பா.ராவின் நடையில் மாவோயிஸ்ட் நிச்சயம் போரடிக்க வைக்காது.
யுவன்சுவாங் இந்தியப் பயணம், முருகேசன், புதுமைப்பித்தன் பதிப்பகம் : யுவான் சுவாங், இந்தியாவுக்கு வந்த சீனப் பயணி என்கிற ஒற்றை வரிதான் பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் அறிமுகம். பிராடிஜி புத்தகத்தைப் படித்த பின்னர் ஆரம்பித்த தேடலின் போது இந்தப் பயணக் கட்டுரை சிக்கியது. யுவான் சுவாங், சீனமொழியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 100 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தமிழில் நிறைய பேர் தழுவியிருக்கிறார்கள். அதில் ஒன்று இது.
ஜே.பியின் ஜெயில் வாசம், கிழக்கு பதிப்பகம் : நான் மொழி பெயர்த்த புத்தகம் என்பதற்காக அல்ல. மக்கள் மறந்து தொலைத்துவிட்ட எமர்ஜென்ஸி பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு முக்கியமான ஆவணப் புத்தகம். சின்ன பட்ஜெட்டில் சென்ஸார் தொல்லையின்றி அரசியல் குறும்படம் எடுக்கலாம்.
கமல், தீனதயாளன், கிழக்கு பதிப்பகம் : கமல் அட்டைப்படம் போட்ட ரஜினி புத்தகம். அப்போதெல்லாம் ரஜனிதான்; ரஜினி அல்ல என்கிற குறிப்பு கூட என்னுடைய புத்தகத்திலேயே இருந்ததில்லை. கமலின் பன்முகத்திறமையை ஆரம்ப வரியில் ஆரம்பித்து கடைசிவரை நெருடாமல் சொருகியிருப்பது பிளஸ் பாயிண்ட். கமல் படத்து விமர்சனங்களைப் போல் உருகி, வழியாமல் உருப்படியாக வந்திருக்கும் பயோகிராபி.
வாத்யார், முத்துக்குமார், கிழககு பதிப்பகம் : சினிமா ரசிகர்களும், அரசியல் அபிமானிகளும் கைகோர்க்கும் சப்ஜெக்ட் என்றாலும் இங்கே எம்ஜிஆரின் தனித்தன்மைதான் ஹைலைட். சினிமா ஹீரோ, அரசியல் ஜீரோ எம்ஜிஆர் பற்றி இன்னும் நிறைய விமர்சனங்கள் வந்தாக வேண்டும். முழுக்கப் படித்து முடித்த பின்னர் இன்னொரு நாள் விரிவாக.
இமயமலை தேசம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் : கிளுகிளு சிறுகதைகளில் தெரிந்த ப்ரியா கல்யாணராமனை விட ஆன்மீக பயணக்கட்டுரைகளில் தெரியும் முகம் சுவராசியமானது. விஜய் டிவியும், சன் டிவியும் போட்டிப் போட்டு மலையேறினாலும் ப்ரியா கல்யாணராமனின் எழுத்து மூலமான விவரிப்பை தாண்டிப் போக முடியாது.
மெக்காலே, பொன்னி பதிப்பகம்: மெக்காலே கல்விமுறை பற்றி பேசப்பட்ட அளவுக்கு மெக்காலே பேசப்படவேயில்லை. இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்த மெக்காலே என்கிற தனிநபரின் வரலாறு விசித்தரமானதும், சர்ச்சையானதும் கூட. மெக்காலேவின் பயோகிராபி எழுதுவதில் ஆர்வமாக இருந்த காலம் உண்டு. தமிழில் மெக்காலே பற்றிய புத்தகங்களே இல்லை. இந்தப் புத்தகம் ஓரளவுக்கு குறையை தீர்க்கிறது.
சைவ சிந்தாந்தம், நந்தலாலா, வரம் வெளியீடு : தஞ்சாவூர்காரனுக்கு சைவ சிந்தாந்தம் பிடிக்காமல் இருந்தால்தான் அது செய்தி. கேட்பாரற்று கிடக்கும் சிவன் கோயில்களின் பெரும்பாலான மூலவர்களுக்கு ஏனோ பசுபதீஸ்வரர் என்றுதான் பெயர். ஆகமம், திருமறை, பஞ்சாட்சரம், தமிழிசை என பல விஷயங்களை நுலிழையில் கோர்த்து சைவ சிந்தாந்தம் என்பது பெரிய சிந்தாந்தம் என்கிற உணர்வை ஏற்படுத்தும் புத்தகம்.


