ஜோதி தீர்ந்த பாசு
Monday, 25. January 2010
ஒப்பாரிகள் ஓய்ந்துவிட்டன. இறுக்கமாக இருந்து பழகிப்போன காம்ரேட்களும் மௌன ஊர்வலம் போய், போட்டோவுக்கு மாலையிட்டு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு விட்டனர். சிறு வயதில் ஜோதி பாசு பிடித்தமான விஐபியாக இருந்தார். மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் யார்? எட்டாங்கிளாஸ் சமூக அறிவியல் பாடத்தில் நிச்சயமாய் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு சர்வநிச்சயமான பதில் தெரிந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரிசர்வ வங்கி கவர்னர் பெயரையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது கஷ்டமான காரியமாக இருந்த பருவம்.

ஜோதிர்ந்த பாசு, கொல்கத்தாவின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். முப்பதுகளில் இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மேற்கொண்டு என்ன செய்வார்களோ அதையே பாசுவும் செய்தார். சட்டப்படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். லண்டன் வாழ்க்கை, பாரிஸ்டர் பட்டம், வழக்கறிஞர் பணி அதே பார்முலா. எல்லோரையும் போல் பாசுவுக்கு அரசியலில் ஆர்வம் வராவிட்டால்தான் நமக்கு ஆச்சர்யம். இந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்காரர்கள் லண்டனுக்கு வந்தால் பாசுதான் சகலமும். காந்தி, நேரு, போஸ் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து லண்டனில் கூட்டம் நடத்துவது பாசுவின் பழக்கம். திருக்குவளை கருணாநிதியின் அரசியல் சேவையும் அப்படித்தான் ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்துவிட்டு கம்யூனிஸ்ட் பக்கம் சென்றதுதான் ஜோதிபாசுவை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.
சீனப்போருக்கு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஜோதிபாசு முக்கியமானவர். 1967ல் மேற்கு வங்கத்தில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசின் துணை முதலமைச்சராக புது இன்னிங்ஸை ஆரம்பித்தார். 1977 முதல் 200 வரை தொடர்ந்து முதல்வராக இருந்திருக்கிறார். 200ல் அவராக விரும்பி முதல்வர் பதவியிலிருந்து விலகியது அந்த வருஷத்தின் தலைப்புச் செய்தி. விலகியிருக்காவிட்டால் இன்னொரு பத்தாண்டு காலமும் முதல்வராகவே இருந்திருக்கலாம்.
ஜோதிபாசுவின் முறைவுக்கு வந்த அஞ்சலிக் கட்டுரைகளில் சம்பிரதாயக் கட்டுரைகளை விலக்கிவிட்டு வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்தேன். ஏமாற்றம்தான். ஜோதி பாசு பற்றி உருப்படியான கட்டுரை ஒன்று கூட தமிழில் இல்லை. பொலிட் பீரோ விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதை குறிப்பிட்டு பாசுவை தியாகியாக்கியிருந்தார்கள். அதில் பொலிட் பீரோ பற்றிய பிரஸ்தாபங்கள் வேறு. ஜோதிபாசு, ஐந்து முறை தொடர்ந்து முதல்வராக இருந்ததை சிலாகித்து ஒரு காம்ரேட்டிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதென்ன பிரமாதம்? பொலிட் பீரோ ஆரம்பித்த காலத்திலிருந்து அதில் உறுப்பினராக இருக்கிறார் என்றார்.
ஒரு முறை ஜோதி பாசு, பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய சட்டமன்றத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாராம். முன்னதாக பட்ஜெட்டை பொலீட் பீரோவில் தாக்கல் செய்யவேண்டும் என்று கடைசிநேரத்தில் ஒரு உத்தரவு. நேராக கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு போய், பட்ஜெட்டை தாக்கல் செய்து, நோ அப்ஜெக்ஷன் பெற்றபின்னர்தான் சட்டமன்றத்திற்குப் போனராம். இதை புல்லரிப்புடன் விவரிக்கிறது ஒரு அஞ்சலிக் கட்டுரை. கருணாநிதிக்கு குடும்பம்; ஜெயலலிதாவுக்கு சசிகலா போல் ஜோதிபாசுவுக்கு பொலிட் பீரோ!
ஜோதி பாசு, பிரதமராக முடியாதது பெரிய சரித்திரப் பிழையாகவே இருந்துவிட்டு போகட்டும். பாசுவே மேற்வங்கத்தின் சரித்திரப் பிழைதான் என்று அதிரடியோடு ஆரம்பிக்கும் மனாஸ் சக்ரவர்த்தியின் கட்டுரை முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. மேற்கு வங்கத்தை, தமிழ்நாட்டோடு ஒப்பிட்டிருப்பதும் கட்டுரைக்குள் நம்மை தொடர்ந்து அழைத்துச் செல்கிறது.
கட்டுரை சொல்லும் செய்தி இதுதான். ஜோதி பாசு முதல்வராக இருந்த காலத்தில்தான் அவரது பிரியத்துக்குரிய சீனதேசத்து காம்ரேட்டுகளால் புதுவிதமான பொருளாதார கொள்கைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. எண்பதுகளில் 7.2 சதவீதமாக இருந்த மேற்கு வங்கத்தின் பொருளாதார வளர்ச்சியை 90களின் உலகமயமாக்கலுக்கு பின்னரும் அதலபாதாளத்தில் வைத்திருந்தது ஜோதிபாசுவின் திருப்பணி. 6.1 சதவீதம் என்கிறது கட்டுரை.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது எண்பதுகளில் 21 சதவீதமாக இருந்த மாநிலத்தின் உற்பத்தி 2004ல் 13 சதவீதமாக குறைந்து போனது. புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்க பெற்றப்பட்ட ஒப்புதல்களும் குறைக்கப்பட்டன. 4 (1977) – 28 (1991). அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 22 (1977) – 68 (1991)
மனிதவள மேம்பாட்டு அறிக்கையின் படி, சமூக வளர்ச்சியில் 1980 முதல் 2001 வரை எட்டாவது இடத்திலேயே இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடோ இடைப்பட்ட காலத்தில் ஏழாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
வறுமை ஒழிப்பிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. 1977ல் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்த மக்களின் சதவீதம் 58.3 சதவீதம். அது 2004ல் 28.6 சதவீதமாகியிருக்கிறது. அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டை 56.3 சதவீதத்திலிருந்து 22.5 சதவீதமாக குறைந்திருக்கிறார்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கழக காம்ரேட்கள். வறுமை ஒழிப்பு பற்றியெல்லாம் காம்ரேட்கள் குறைந்தபட்சம் மேற்கு வங்கத்து காம்ரேட்கள், கொஞ்சநாள் பேசாமலிருப்பது உத்தமம்.
சட்டம் ஒழுங்கு பற்றியெல்லாம் சொல்லவே வேண்டியதில்லை. இனி மேற்கு வங்கத்தை பீகாருடன் மட்டுமே ஒப்பிடவேண்டும். நந்திகிராமம் ஞாபகமிருக்கிறதா? கம்யூனிஸ்ட் கோட்டையை தகர்க்க வந்த காளியாக மம்தாவை போற்றுகிறார்கள். உண்மையில் மம்தா பானர்ஜியிடம் பாதி ஜோதி பாசுவை பார்க்க முடியும் என்பதுதான் கசப்பான உண்மை. இனி கொல்கத்தாவை நிஜ காளிதான் காப்பாற்ற வேண்டும்.



தையல் - thaiyal.com Says:
[...] முந்தைய பதிவு : ஜோதி தீர்ந்த பாசு [...]