Follow up – ஜோதி தீர்ந்த பாசு

Tuesday, 16. February 2010

கட்சியும் கோட்பாடும் ஒன்றாக இருந்தாலும் சக தோழர்களிடம் பாசு முரண்பட்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு. விவசாய நிலங்கள் அதிகமுள்ள மேற்கு வங்கத்தில் தொழிற்சாலைகளை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் பிடிவாதம் பிடித்தபோது தொழில் வளத்தைப் பெருக்குவதற்கான திட்டங்களை அவர் அமல்படுத்தினார். ஆனால் அவற்றின் மூலம் விவசாயம் மண் மூடிப் போகாமலிருக்கவும் மாற்றுத் திட்டங்களை முன்வைத்தார். சிங்கூரில் தொழிற்சாலை அமைக்க தரிசு நிலத்தைத்தான் வழங்க வேண்டும் என்பது அவருடைய அபிப்பிராயம். ஆனால் அரசு சாகுபடி நிலங்களைத் தானம் செய்ய முன் வந்தது. அதன் விளைவாகவே மக்கள் போராட்டத்தில் இறங்கினர். நோய்ப்படுக்கையில் காலம் கழித்த ஜோதிபாசுவுக்கு அது தீராத மன வேதனையை அளித்திருக்கும். பாசுவின் நிலைப்பாட்டில் விவசாயத்துக்கு ஆதரவான அம்சம் இருந்தது போலவே ஒரு சாமான்ய வங்காளியின் நிலப் பற்றும் இருக்கிறது. இதில் செவ்வியல் மார்க்சியத்தின் ஆதார நிலை இருப்பதாகவும் சொல்லலாம். ஒரு தேசிய இனத்தின் பிரச்சினைகளை அதன் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட்டு அதை ஒரு துணைத் தேசியமாகக் கருதுவது என்ற பாடம். அதை ஜோதிபாசு நடைமுறைப் படுத்தியிருக்கிறார் என்று கணிக்கலாம்.

உயிர்மையில் கவிஞர் சுகுமாரனின் அஞ்சலி

வெண்டைக்காய் வாதம். முள்ளும் உடைந்துவிடாமல் சேலைக்கும் சேதாரமில்லாமல் காப்பாற்ற முயற்சிக்கிறார் சுகுமாரன். ஜோதி பாசுவின் மனது, வங்காளத்தில் தொழில்வளத்தைப் பெருக்க துடியாய் துடித்தது உண்மையென்றால் 30 ஆண்டுகால ஆட்சியில் கொஞ்சமாவது கடைத்தேறியிருக்கலாம். முயற்சித்தேன். ஆனாலும் முடியவில்லை. அந்தத் தோல்வியின் காரணமாகத்தான் பதவி விலகுகிறேன் என்றாவது மனசாட்சிக்கு மரியாதை செய்திருக்கலாம். கட்சி மேலிடம்தான் காரணம் என்றால் அதையாவது சொல்லியிருக்கலாம். காங்கிரஸ்காரர்களின் டெல்லி மேலிடம் போல் காம்ரேட்டுகளுக்கும் ஒரு மேலிடம் என்று உதறிவிட்டு போயிருப்பார்கள்.

ஜோதி பாசுவை துக்கிப் பிடித்தால் பொலிட் பீரோவை பற்றி விமர்சிக்க வேண்டியிருக்கும். காம்ரேட்டுகள் அனுமதிக்க மாட்டார்கள். பாசுவை விட பீரோதான் முக்கியமென்றால் 50 வருஷ அரசியல் வாழ்க்கையில் பாசு செல்லாக்காசுதானா? ஜோதி பாசுவுக்கு பதிலாக குப்பனோ, சுப்பனோ கூட முதல்வராக இருந்திருக்கலாமோ? வாஜ்பாய்க்கு பதிலாக ஜோதி பாசுதான் பிரதமராக வரவேண்டியதாம். வாஜ்பாயின் குடுமி, போயஸ் கார்டன் கட்டுப்பாட்டில் இருந்ததைப்போல பாசுவின் குடுமி பொலிட் பீரோவில் இருந்திருக்கும்.

வங்காளியின் நிலப்பற்று, செவ்வியில் மார்க்ஸியம் என்றெல்லாம் குழப்பி ஒருவழியாக வங்காளத்தை துணைத் தேசியமாக துக்கிப்பிடிக்கிறார் ஜோதி பாசு என்று முடித்திருக்கிறார் சுகுமாரன். திராவிட கழகங்கள் செய்ததில் பத்து சதவீதத்தைக் கூட செய்ய முடியாத வங்கத்து காம்ரேட்டுகள் துணைத் தேசியம் பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கைதான். நம்மூரில் திராவிட கழகத் தலைவர்கள் யாராவது மண்டையைப் போட்டால் எழுதுவதற்கு உபயோகமான உணர்ச்சிகரமான இன்னொரு டெம்ப்ளேட் இது.

சிங்கூரில் தரிசு நிலத்தைத்தான் வழங்கவேண்டும் என்பது பாசுவின் அபிப்பிராயமாம். அதனால் தீராத மனவேதனையில் இருந்தாராம். கல்லுளி மங்கன் கடைசிவரை மனம் திறக்கவில்லை. இதற்கும் பொலிட் பீரோதான் காரணமோ? காமராஜ்க்கு கூட அந்த மனவேதனை இருந்தது. எமர்ஜென்ஸி நேரத்தில் இந்திராவை நினைத்து மனவேதனையில் இருந்து உயிரை விட்டாராம். போகிற போக்கில் கலைஞர் நல்ல மனிதர் என்று சர்ட்டிபிகேட் வேறு கொடுத்தார். சர்ட்டிபிகேட் கொடுத்த நேரத்தில், திருமலைப்பிள்ளை ரோட்டை சுற்றி வந்தவர்களை கோபாலபுரத்திற்கு அனுப்பி வைத்திருக்கலாம். கடைசி வரை காங்கிரஸ்காரனாகவே இருந்து சுற்றியிருந்த அடிப்பொடிகளையெல்லாம் (குறிப்பாக பா. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், குமரி அனந்தன் பிரதானவர்கள்) குழப்பதில் தள்ளிவிட்டுதான் காமராஜ் ஓய்ந்தார். 35 வருஷமானாலும காமராஜ்க்கு இருந்த தீராத மனவேதனை இந்திரா காங்கிரஸாருக்கு புரிவதில்லை. ஜோதிபாசுவின் தீராத மனவேதனையும் எத்தனை வருஷமானாலும் காம்ரேட்டுகளுக்கு புரியப்போவதில்லை அல்லது புரியாதது போல் நடிப்பதை நிறுத்தப்போவதில்லை.

முந்தைய பதிவு : ஜோதி தீர்ந்த பாசு

Comments are closed.