மை நேம் ஈஸ் அஜீத்
Saturday, 20. February 2010
அஜீத் பேசியதை கமல் இன்னும் நன்றாக மொழிபெயர்த்திருக்கலாம். அமிதாப்பும் புரிந்து கொண்டு எழுந்து நின்று கைதட்டியிருப்பார். ஏதோ உள்நாட்டு பிரச்னை என்று அசுவராசியமாய் பார்த்துவிட்டு கிளம்பிப்போன அமிதாப், டெல்லியில் வசமாக சிக்கிக்கொண்டார். மை நேம் ஈஸ் கான் பற்றி கருத்துக் கேட்டபோது விதியின் குரல் மிரட்டியது. சுதாரித்துக்கொள்ள நினைத்தார். காதில் விழவில்லை,எனக்குத் தெரியவில்லை என்றெல்லாம் அபிநயம் காட்டி சமாளிக்க வேண்டியிருந்தது. சக நடிகர்களால் எவ்வளவு கஷ்டம்!
தமிழ்நாட்டில் பேச்சு சுதந்திரம் பறிபோய்விட்டது என்று ஜெயா டிவி கதறுகிறது. கலைஞர் டிவியின் நடு ராத்திரி மசாலாவில் கூட அஜீத் குமார் பாட்டு வரவில்லை. அசல் அஜீத்குமார் பற்றி தமிழ் நாட்டு அறிவுஜீவிகளும் கருத்து சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அசல் தேறவில்லை. பெரியவர் முன்னிலையில் இப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது என்கிறார்கள் சிலர். நடிகர்களுக்கு சமூக பிரக்ஞை உண்டா, இல்லையா என்று சூடேற்ற கோபிநாத்தும் தயாராகிவிட்டார். அஜீத்துக்கு இதெல்லாம் தேவையில்லை. வாழ்விக்க வந்த வள்ளலே போற்றி என்று போற்றிவிட்டு போயிருக்கலாம். இல்லாவிட்டால் துரைமுருகனின் ஸ்டெடி பற்றியோ ஜெகத்ரட்சகனின் தமிழ் மூச்சு பற்றியோ வேறு ஏதாவது சொல்லி ரூட்டை மாற்றியிருக்கலாம். இப்போது மார்கெட் போன ஸ்டண்ட் மாஸ்டர் கூட மல்லு கட்ட வேண்டியிருக்கிறது.
நல்லவேளை ஷாரூக் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. எதைப் பற்றியும் எங்கேயும் அவரால் உளற முடியும். டூவிட்டுவது அவரது பெரிய பொழுதுபோக்கு. இதெல்லாம் பப்ளிசிட்டிக்கா என்று யாராவது டூவிட்டினால் ஷட் அப் என்கிறார். சினிமாவில் நடிப்பதை விட டிவிக்கு முன்னர் நிறைய நேரம் செலவிடுகிறார். மீடியாவில் இமேஜ் வளர்க்க ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கி வைக்கிறார். ஷாரூக்கைப் போல் ஹைடெக் நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லை. கமல் கூட ஷாரூக் அளவுக்கு ஹைடெக் ஆசாமி இல்லை என்று சொன்னால் நிறைய பேருக்கு ஹார்ட் அட்டாக் வரும். தமிழ்நாட்டில் எல்லோரும் உணர்வுப்பூர்வமானவர்கள், வெகுளிகள்.
ஷாரூக், இந்திய சினிமாவின் இந்த வருஷத்து பாஸ். அமிதாப் பச்சனும், அமீர்கானும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நேஷனல் மீடியா தீர்ப்பு சொல்லிவிட்டது. ஷாரூக்கும் படம் வெளியாகும்போதுதான் நிறைய பேசுகிறார். நிறைய சிந்திக்கிறார். பெட்ரோல் விலை, காஸ் விலை பற்றியெல்லாம் அவர் கருத்து சொல்வதில்லை. பி.டி. கத்தரிக்காய் பற்றிச் சொன்னால் கூட பிரைம் டைமில் பிளாஷ் காட்ட மீடியா தயாராக இருக்கிறது. ஆனால் ஷாரூக் கானுக்குத்தான் நேரமில்லை.
மை நேம் ஈஸ் கான் படம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் ஷாரூக் அமெரிக்க விமான நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டபோது அதன் மார்கெட்டிங் ஆரம்பமாகிவிட்டது. நம்மைப் போல் சுதந்திர தினத்தை சன் டிவியோடு கொண்டாடாமல் அமெரிக்காவுக்கு கொடியேற்றப் போன ஷாரூக்கானை நியூஜெர்சி ஏர்போர்ட்டில் உட்கார வைத்த அந்த இரண்டு மணி நேரத்தில் மீடியா பற்றி எரிந்தது. ஷாரூக் தாக்கப்பட்டார் என்பதில் ஆரம்பித்து தள்ளுமுள்ளு என்றெல்லாம் மீடியா முனகியது. மத்திய அமைச்சர் பிரபுல் படேலே பொங்கி எழுந்தார். சம்பவம் தொடர்பாக உண்மையை ஆராயப்போவதாக வாக்கு கொடுத்த அமெரிக்காவுக்கான இந்திய துதர் இன்னும் வேலையை முடிக்கவில்லை.
படத்தின் சப்டைட்டிலில் நியூஜெர்சி ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார்களா என்பது தெரியவில்லை. விஷயம் பூதாகாரமாகத்தான் இருந்தது. ஷாரூக், எங்கள் தங்கம் என்கிற ரேஞ்சில் இந்திய அதிகாரிகளும் கருத்து சொன்னார்கள். இந்தியாவுக்கு திரும்பியதும் பிரஸ்மீட் வைத்து, ஜனாதிபதிக்கே நேர்ந்த விஷயம் என்று விளக்கினார். யாருடைய ஸாரியும் எனக்குத் தேவையில்லை என்றார். அன்றிலிருந்து இன்று வரை ஸாரி என்பதே ஷாரூக்கின் அகராதியில் இல்லை என்பது வெளிப்படை.
நிறைய பணம் கொஞ்சம் சமூக பிரக்ஞை இதுதான் ஷாரூக்கின் கொள்கை. அதற்காக யாரையும் எதிர்த்து பேசவோ, கருத்து தெரிவிக்கவோ, புகழ்ந்து பாடுவதிலோ எந்த தயக்கமும் இல்லை. ஷாரூக்கிடமிருந்து அஜீத் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. உன்னுடைய வேலையை நீ பார்த்துக்கொண்டே இரு. பிரச்னை என்று வந்தால் மக்களை தொடர்பு கொள். அதாவது மீடியாவை தொடர்பு கொள். முடிந்தவரை எதிலும் ஆதாயம் தேடு. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிடாதே. ஆனால் எப்போதும் முழு நேர அரசியல்வாதியாக இரு.


