தியாகராஜ பாகவதர் – 100
Monday, 1. March 2010
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்த கையோடு பாகவதர், வேலுர் ரசிக ரஞ்சனி சபாவில் கச்சேரி செய்ய வந்திருந்தார். ராஜா தியேட்டரில் பகலில் இருந்தே பாகவதரைப் பார்கக பெரிய கூட்டம். கலெக்டர் ஆர். சி. எஸ். பெல், போலீஸார் புடை சூழத் தியேட்டர் வாசலில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார். தியேட்டர் கூரையின் மீதும், ராஜா மான்ஷன் நீண்ட மாடிக் கட்டிடங்களிலும் மற்ற எல்லா இடங்களிலும் விதவிதமான மனிதத்தலைகள்.
‘பாகவதர் வரமாட்டார்.. சும்மா டூப் விட்டிருக்காங்க’ என்று ஒரு புண்ணியாத்மாக தை கட்டிவிட அதற்குத் தலையும் காலும் வளர்ந்து மக்களிடையே குழப்பத்தைத் தோற்றுவித்தது. மலைப்பிஞ்சுகள் பறந்தன. குதிரைப் போலீசுக்கு வேலை ஏற்பட்டது.
பின்புற வழியாக தியேட்டருக்குள் பாகவதர் போய்விட்டார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டதும் கச்சேரி முடிந்து வெளியே வரும்போதோவது பார்க்கலாமே என்றுஜனங்கள் காத்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
கச்சேரி முடிந்ததும் மக்கள் வெளியே வரத் துவங்கினார்கள். இதுதான் சமயம் என்று எப்படியோ சுண்டெலி ஓடுவது போல் தியேட்டருக்குள் போய் மேடையருகில் இருந்த கூட்டத்தில் துளை போட்டுக்கொண்டே முன்னேறிவிட்டேன்.
பாகவதர், அடடா! என்ன சந்தன நிற மேனி. பளபளப்பு. கவர்ச்சி. பக்க வாத்தியக்காரர்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். நீட்டினேன் நோட்டை. உற்றுப் பார்க்கிறார் என்னை. நான் கண்களால் கெஞ்சுகிறேன். பேசிக்கொண்டே வாங்குகிறார்.
எங்கு நோட்டை வைத்துக் கையெழுத்து போடுவது? எதிரே ஆலங்குடி ராமச்சந்திரனின் பரப்பான முதுகு தெரிகிறது. ‘கொஞ்சம் அசங்காமல் இருங்கள்’ என்று சொல்லிக் கையெழுத்துப் போடுகிறார் பாகவதர். அதற்குள் கூட்டம் அதிகரித்து விடவே, கூட்டத்தைக் கலைகக ஆரம்பித்துவிட்டனர் நிர்வாகிகள்.
நான் மட்டும்தான் அன்று கையெழுத்து வாங்கியவன். பாகவதரை பார்க்க முடியாதவர்கள் பலர் என் நோட்டைப் பார்த்து திருப்தி அடைந்தனர். சந்தோஷப்பட்டனர்.
- பாகவதரிடம் ஆட்டோகிராப் வாங்கிய ரசிகரின் குறிப்புகள்.
பின்குறிப்பு: பாகவதரின் கையெழுத்து சுவராசியமாக இருக்கிறது. முதல் எழுத்தான M உடைந்து விழாமல் இருக்க அடித்தளம் இட்டதுபோல் வளைந்து நிற்கிறது. அந்த V ஷேப் கூட நெருக்கமாக இருக்கிறது. வீழ்ந்த உடன் எழுந்துவிடலாம் என்று நினைத்தாரோ என்னவோ? அடுத்து வரும் Kவின் கீழ்ப் பகுதி புஷ்டியாக இருக்கிறது. தி க்கு மேலே கொஞ்சம் தாராளமாக இழுத்துவிட்டிருககிறார். கம்பீரமாக கொடி பறக்கிறது! ஜ, அவர் சபையில் உட்கார்ந்திருப்பதைப் போலவே ஜம்மென்று நடுநாயகமாக வீற்றிருக்கிறது. ஜவை விடாமல் பா வரை தொடர்கிறார். பாகவதரின் கச்சேரிகளில் வெற்றிலை மெல்வதற்குக் கூட இடைவெளி விடுவதில்லை. ஒரு சாதாரண ரசிகருக்கான ஆட்டோகிராப் என்கிற அலட்சியமெல்லாம் இதில் இல்லை. கர்மசிரத்தையாக போட்டிருக்கிறார். குறைந்தபட்சம் ஒன்றரை நிமிஷமாவது ஆகியிருக்கும். வாழ்த்து கோஷங்கள், கூச்சல்கள், குழப்பங்கள், தள்ளுமுள்ளு என்னும் அசாதாரணமான சூழ்நிலையிலும் நிதானமாககையெழுத்திட்டிருக்கிறார் என்பது இங்கே முக்கியமான விஷயம்.


