ரிமோட் – வீடியோவில் இருப்பது நானேதான்
Sunday, 14. March 2010
பாலிமர் டிவியில் கந்தன் கருணை என்னும் முழுநீள காமெடி படம். சொல்லச் சொல்ல இனிக்குதடாவில் சொக்கிப்போய் தொடர்ந்தேன். விதி யாரை விட்டது? சின்ன வயதில் கொத்தத் தெரு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவில் நள்ளிரவு பார்த்த ஞாபகம் வந்ததால் தொடர்ந்தேன். படுத்தி எடுததுவிட்டார் சிவாஜி! ”கண்ணே, என்னைப் பார்; என்னை மட்டுமே பார்” ஓவர் அலட்ட்ல். வீரபாகு சொல்லும் வேலையையெல்லாம் முருகன் செய்கிறார். இதற்கு சிவாஜியே முருகனாக நடித்துத் தொலைத்திருக்கலாம். ஏவிய வேல் திரும்பி வருமபோது சரியாக கேட்ச் பிடிக்கிறார் சிவகுமார். கடைசியில் கொசுறாக வெற்றிவேல், வீரவேல் என்று பாட்டு வேறு. 67 எலெக்ஷன் நேரத்தில் ரீலிஸானதாம்!
கலைஞர் டிவியில் சச்சின் பற்றி ஸ்பெஷல் தொகுப்பு. ஜவ்வென்று அடுத்த வாரம் கூட இழுக்கிறார்கள். லோக்கல் மேட்ச்சில் இருக்கும் வேகம் கூட இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் முதல் டெஸ்ட்டில் சஞ்சய் மஞ்ச்ரேகர்தான் உண்மையில் நன்றாக ஆடினார் என்று சச்சினோடு இன்ன பிற விஷயங்களையும் தொட்டுக்காட்டினார் பத்ரி. உன்னிப்பாக கவனித்ததில் சச்சினைவிட கபில், வெங்சர்க்கார் வகையறாக்களை பற்றி அதிகமாக சொல்லி எண்பதுகளை ஞாபகப்படுத்தினார். காம்ப்ளி, சஞ்சய் மஞ்ச்ரேகரெல்லாம் இப்போது மைக் கூட பிடிப்பதில்லை. பைதபை பத்ரியின் சிரிப்புக்கும் கீழே தெரியும் பிளாஷ் செய்திக்கும் நிச்சயம் சம்பந்தமில்லை!
சங்கரா, புதுசு கண்ணா புதுசு. ஏற்கனவே இருக்கும் அரைடஜன் பக்தி சானல்களில் இதுவும் ஒன்று என்றெல்லாம் அவசர முடிவுக்கு வரமுடியவில்லை. காரணம், எஸ் எஸ் மியூசிக்கிற்கு அடுத்தபடியாக இதுதான் சவுத் சானல். காமிராவுக்கு முன் தலைகாட்டுபவர்களெல்லாம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் என்று சரளமாக பேசுகிறார்கள். பக்திமாலையும், ஆலய தரிசனங்களும், வேத கோஷங்களும் சிலிர்க்க வைக்கின்றன. பிள்ளைகளின் பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கு சைக்காலஜி பழகணும் என்று உருப்படியாக விவரிக்கிறார்கள். பூஜையறையில் விளக்கை வடக்கே ஏற்றலாமா, தெற்கே திரும்பலாமா என்று அதிமுக்கிய விவாதமும் இன்னொரு பக்கம் நடக்கிறது! தேவுடா தேவுடா!
போனவாரத்தின் ஹாட் டாபிக்தான் இன்றைய டாக் டாபிக்! மகிளா சபை பெண்மணிகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அடித்துக்கொண்டார்கள். 14 வருஷத்து புலம்பலுக்கு கிளைமாக்ஸ் கொண்டு வருவதில் உறுதியாக இருந்த சோனியா பற்றி யாரும் பேசவில்லை. லல்லு பற்றியும் முலாயம் சிங் பற்றியும் அவர்களது வெள்ளை மனது பற்றியும் சிரிக்காமல் பேசினார்கள். எப்போதும் சளைக்காத விக்ரம் இன்று தடுமாறித்தான் போனார். இந்திய தெரியாதவர்கள் ரிமோட்டை கடாசியிருப்பார்கள். வருஷக்கணக்காக நிலுவையில் இருககும் விவாதத்தை 40 நிமிஷத்தில் முடிப்பது கஷ்டமான காரியம். எப்படியோ காரியம் முடிந்துவிட்டது. இனியாவது விலைவாசி உயர்வு பற்றியெல்லாம் யாராவது பேசுவார்களா???
இன்னுமாடா இந்த உலகம் நம்மளை நம்புது? கொஞ்சம் சீரியஸாகவே கேட்கிறார் வடிவேலு, ஆதித்யாவில். தமிழ்நாட்டில் சாமியார் அலை ஓயவில்லை. பேட்டி கொடுக்க நேரமுண்டு. பிளைட் பிடித்து பெங்களூருவுக்கு வர நேரமில்லை. தேசிய சானல்கள் இப்போதுதான் விஷயத்தை மோப்பம் பிடித்திருக்கின்றன. நக்கீரன் ரொம்பவே முந்திவிட்டது. ரஞ்சிதாவை பார்த்து அனுதாபப்படுவர்கள் லிஸ்ட்டில் எதிர்பார்த்ததுபோலவே ஞாநியும் சேர்ந்துவிட்டார். சன் நியூஸ் பார்த்தே முகம் சுளிப்பவர்கள் ஒரிஜினலை இன்னும் பார்ககவில்லை என்றுதான் அர்த்தம் இந்த ஆண்டின் சிறந்த எடிட்டர் சன்நியூஸ் சேனல் எடிட்டர்தான். காஞ்சிபுரம் சிடி போலவே இந்த சிடியும் மார்கெட்டுக்கு வருவதற்குள் நக்கீரன் முந்திக்கொள்ளட்டும்!


