குர்ஜரி யாத்ரா – 3

by

தடித்த ப்ரேம் போட்டட கண்ணாடி, லேசான மஞ்சள் கலர் குர்தா சகிதம் எங்களை வரவேற்ற கன்ஷ்யாம் ஜோஷிக்கு நிச்சயம் 80 பிளஸ் வயது இருக்கும். அவரது அழகான ஹிங்கிலிஷில் கொஞ்சம் குஜராத்தி, மராத்தி வாசனை தூக்கலாகவே இருந்தது. பரோடாவிலிருந்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து சம்பானேர் வந்திருந்தோம். அங்கிருந்து தெற்கு நோக்கி ஒன்றரை மணி நேரம் பயணித்தால் வருவது, கோத்ரா!

எதிர்பார்த்தபடியே குஜராத்தின் ஒரே ஒரு, யுனஸ்கோ, உலகப் பாராம்பரியச் சின்னம் என்கிற சங்கதிகளோடு ஆரம்பமானது லெக்சர். கூலிங்கிளாஸ், தொப்பி, காமிரா, வாவ் கூட்டத்தையே பார்த்து பழகிய ஜோஷிக்கு நாங்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள் என்பதை புரிய வைக்க பத்து நிமிஷம் ஆனது. சாம்பானேர், பாவ்கட் பகுதியின் கலாச்சார சின்னங்கள் தொடங்கி பின்னர் சுல்தான் மஹ்மூத் பேகடா பக்கம் திரும்பியது.

champa1

அஹ்மத் ஷாவின் கொள்ளுப்பேரனான பேகடா, குஜராத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஆசாமி. 8ஆம் நூற்றாண்டில் பஞ்சமால் பகுதியின் இதயப்பகுதியாக இருந்த சாம்பனேர் மீது படையெடுத்த பேகடா, அதை தன்வசமாக்கி முஹ்மதாபாத் ஆக்கினார். 14-ம் நூற்றாண்டில் அவர் கட்டியதாக நம்பப்படும் ஜாமி மஸ்ஜித் என்னும் மசூதியில்தான் நின்று கொண்டிருந்ததோம். 

இந்து-முஸ்லீம் கட்டிடக்கலைக்கு ஆதாரமாகவும், குஜராத்தின் முக்கியமான மசூதியாகவும், பேகடாவின் பிரதான சிருஷ்டியாகவும் இருப்பது இந்த ஜாமி மஸ்ஜித். 66 மீட்டர் நீளமும், 55 மீட்டர் அகலமும் கொண்ட மசூதிக்கு மூன்று வாயில்கள் உண்டு. அதில் தோரணங்களும் உண்டு. வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்று பக்கமும் தென்படும் முக மண்டபங்கள் அல்லது கன்னி மாடங்கள், கிழக்கு வாயில் தோரணங்கள் எங்கும் ஹிந்து ஸ்டைல்.

champa3

 

ஜாமி மஸ்ஜித்தின் முதல் அட்ராக்ஷன், அந்த கிழக்கு வாயில். கருங்கல்லும், சுண்ணாம்புச் சாந்தும் இணைத்து கட்டப்பட்டது. முக்கோண வளைவுகள் முஸ்லீம் கட்டிக்கலையையும், அதில் பொறிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள் இந்து கட்டிக்கலையையும் காட்டுகின்றன. முக்கோண லேயர், அடுத்தடுத்த லேயரில் எண்கோணமாக மாறி, வட்டமாக முழுமை பெறுவதுதான் இங்கே ஸ்பெஷல்.

கிழக்கு வாயிலில் குரூப் போட்டோ எடுத்துக்கொள்வது என்று முடிவானது. வந்தோம் என்கிற வரலாற்றை பதிவு செய்யும் முயற்சியாக முதல் குரூப் போட்டோ! குழுமத்தின் ஒளி ஓவியரான அஷோத் புதிதாக வாங்கியிருந்த குழி/குவி லென்ஸை பயன்படுத்தி, வளைத்து, வளைத்து எடுத்த படம். ஓட்டு மொத்த குர்ஜரி டீமும் ஒரே ஷாட்! நண்பர் அஷோக்கின் படங்களை பயன்படுத்துவதில் ஒரு அபாயம் இருக்கிறது. படிக்க ஆரம்பிப்பவர்கள் எலிக்குட்டியை மெல்ல நகர்த்தி, படங்களை மட்டும் பார்த்துவிட்டு படிக்காமல் நகர்ந்துவிடுவார்கள்!

champa7

படம் உதவி : அஷோக் கிருஷ்ணசுவாமி

பேக் டு த பாயிண்ட். கிழக்கு நுழைவாயிலை கடந்து மசூதிக்குள் நுழைந்தால் பிரேயர் ஹால். ஒட்டுமொத்த ஹால் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் முக்கோண வடிவிலான நுழைவாயிலும் அதன் சுவர்களில் சுண்ணாம்பு சாந்துகளால் இழைக்கப்பட்ட விதவிதமான ஜாலிகள். மசூதி முழுக்க 172 தூண்கள், ஒவ்வொன்றும் வித்தியாசமான வேலைப்பாடுகள் கொண்டவை. மசூதியின் உள்ளிருக்கும் தூண்கள் சலவைக்கல்லோ என்று நினைக்குமளவுக்கு வழுவழுவென்று வெண்ணிறத்தில் பளிச்சென்று இருக்கின்றன. 

மசூதியின் மையப்பகுதியில் இருக்கும் பிரம்மாண்டமான குவிந்த கூரையும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள வேலைப்பாடுகளும் முக்கியமானவை. மொத்த கூரையும் இரண்டு தளங்களாக பிரிக்கப்பட்டு, இடையில் வெளிச்சமும், காற்றும் வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. மையக்கூரை மட்டும் 1508ல் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. கல்வெட்டு இருந்து, பின்னாளில் காணாமல் போய்விட்டதாம்! பேஷன் டிசைன் படிப்பவர்கள் ஏன் கூட்டம் கூட்டமாக இங்கே வந்து குவிகிறார்கள் என்னும் கேள்விக்கு இதன் வேலைப்பாடுகள்தான் காரணம்.

champa4

மையக்கூரை தவிர்த்து சிறிய அளவிலான 6 கூரைகள் உள்ளன. ஒவ்வொரு கூரையின் மையப்பகுதியிலும் பல அடுக்கிலான வேலைப்பாடுகள். இதே போன்ற வேலைப்பாடுகளை மோதேரா சூரியக் கோயிலிலும் காணமுடிந்தது. மசூதியின் தெற்குப்புற சுவர்களில் ஏராளமான ஜாலிகள். அவற்றில் ஒன்று, அகமதாபாத்தின் பிரசித்திப் பெற்ற IIM லோகோவையும் மிஞ்சும்படியான ஜாலி. 

மசூதியின் மேற்குக் சுவரை ஒட்டியபடியே ஏழு பிரார்த்தனை கூடங்கள் உள்ளன. வடக்குப் பகுதியினாது பிற பகுதிகளிலிருந்து திரை போன்ற ஜாலிகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தனியாக ஒரு நுழைவாயில். சுல்தான் குடும்பத்து ஆசாமிகள் வருவதற்காக இருக்கலாம். முஸ்லீம் பெண்கள் வழிபாடு செய்வதற்காகவும் இருக்கலாம் என்றார் ஜோஷி. இருக்குமோ?!

கபூதர்கானா , எங்களின் அடுத்த ஸ்டாப். வாடா ஏரியின் ஒதுக்குப்புறத்தில் கட்டப்பட்ட மினி ஜாமி மஸ்ஜித். வாடா ஏரி என்பது நீர் ஆதாரம் எதுவுமில்லாத அந்தப் பிராந்தியத்தில், பாவ்கட் மலையின் அடிவாரத்தில் மழை நீரை தேக்கி வைக்க உருவாக்கப்பட்ட ஏரி. ஏரிக்கரையோரமாய் கட்டப்பட்டு இப்போது சிதிலமாகிக் கிடக்கும் கபூதர்கானா ஒருவேளை கெஸ்ட் ஹவுசாகவோ, பேகடாவின் குஜால் பிரதேசமாகவோ இருந்திருக்கலாம். காரணம், இங்கிருந்து பார்த்தால் பாவ்கட் மலையின் மொத்த அழகையும் மிச்சமில்லாமல் ரசிக்க முடியும்.

champa6

 படம் உதவி : அஷோக் கிருஷ்ணசுவாமி

கபூதர்கானாவுக்கு எதிர்ப்புறம், ஏரிக்கரையில் இருக்கும் ஒரு சின்ன மண்டபத்தில் லன்ச். சப்பாத்தி, வெஜ் ரைஸ், தயிர்சாதம், பாஜி மற்றும் வதக்கின வெண்டைக்காய் பொரியல். தேவையே இல்லாமல் பெரிய சைஸில் ஒரு அப்பளம் வேறு. பத்ரி தன்னிடமிருந்த 2 சப்பாத்திகளையும் என்னிடமே கொடுத்துவிட்டார். ஹெவி லன்ச்!

ஜிலுஜிலு காற்று, ஏரியின் ஈரப்பதம் எல்லாம் சேர்ந்து கண்ணை அழுத்த, தூக்கத்தை தவிர்ப்பதற்காக சின்ன நடை நடந்து ஏரியை எட்டிப்பார்த்தேன். தூரத்தில் ஒருவர் பஞ்சகச்ச வேஷ்டியோடு நீராடியபடியே ஏரியில் நகர்ந்து கொண்டிருந்தார். கடிகாரத்தைப் பார்த்தேன். இரண்டு மணி. திங்கள்கிழமை வேறு. குளிகையோ?!

குர்ஜரி யாத்ரா – 2

by

ரவிஷங்கர் தியாகராஜன்,  எழுத்தாளர் அசோகமித்திரனின் மூத்த மகன். முதல் முறை சந்திக்கும்போது எனக்கும் அதே ஆச்சர்யம்தான். அப்பாவைப் போலவே வார்த்தைகளை சிக்கனமாக கையாளுபவர். மகனாக இருந்தும் எழுத்தாளர் அசோகமித்திரனை முற்றிலுமாக புரிந்து வைத்திருப்பவர். பின்னொரு சந்தர்ப்பத்தில், அசோகமித்திரனின் நாவல்களுக்கு பின்புலமாக இருந்த தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியபோது இரண்டு மணி போனதே தெரியவில்லை. 2004ல் நண்பர் முத்துராமன், அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளை தொகுத்தபோது பகிர்ந்து கொண்ட சுவராசியமான  செய்திகளும் கிழக்கின் அசோகமித்திரன்-50 விழா சம்பந்தபட்ட விஷயங்கள் என ஏதோதோ நினைவலைகள் வந்து தழுவ, லோத்தல் நோக்கி பயணப்பட்ட நேரம் அது.

விஜயவாடா தாண்டுவதற்குள் ரயில் ஸ்நேகமாய் ஒரு நண்பர் கிடைத்தார். தர்மபுரியைச் சேர்ந்தவர், இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியாம். ஏற்காடு எக்ஸ்பிரஸில் கிளம்பி, சென்ட்ரலில் இறங்கி, நவஜீவனைப் பிடித்து அஹமதாபாத்தில் இறங்கியாகவேண்டும். அங்கிருந்து இன்னொரு 12 மணி ரயில் பயணமாம். பேசிய நேரம் தவிர பெரும்பாலான நேரம், செல்பேசியில் கவுண்டமணி காமெடியை ரசித்தபடியே வந்தார்.

வதோதராவில் இறங்கும்போது மாலை மணி 5.  டொயோட்டாவில் இரண்டு U டர்ன் அடித்து, 200 அடி தாண்டுவதற்குள்  ஹோட்டல் வந்துவிட்டது. சென்னையிலிருந்து முன்னரே பறந்து வந்திருந்த பத்ரி உள்ளிட்டவர்கள் எங்களை வரவேற்கத் தயாராக இருந்தார்கள். அவசர, அவசரமாக குளித்து, ஆவி பறக்க சௌத்ரி சாய் அருந்திவிட்டு பக்கத்தில் இருந்த மார்க்கெட்டுக்குள் நுழைந்தேன்.

பரபரப்பான காய்கறி மார்கெட். எங்கு திரும்பினாலும் பழைய பல்பின் வெளிச்சம். ஆனாலும் இருட்டை விரட்ட முடியவில்லை. நம்மூர் பண்ருட்டி மார்கெட் கூட வெண்ணிற வெளிச்சத்தில் பளிச்சென்று இருக்கிறது.  மார்கெட் என்றிருந்தால் நடுநடுவே முட்டாத மாடுகள் அலைந்தாக வேண்டும். இவை அத்தனையையும் தாண்டி கவர்ந்த விஷயம்,  காய்கறிகளின் விலையும், அதை கிலோ கணக்கில் வாங்கிச் செல்லும் மக்கள் கூட்டமும்.

IMG_20140126_190038

கேரட், கத்தரி, கோவை, வெண்டைக்காய் என பெரும்பாலான காய்கறிகளின் விலை 15 அல்லது 20 ரூபாயாக இருந்தது. கால் கிலோ அல்ல, ஒரு கிலோ! பெரும்பாலும் கூவி, கூவித்தான் விற்கிறார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது இரைச்சல் காதை துளைக்கிறது.  விலையை சிலேட்டில் எழுதி தொங்கவிட்டிருந்தாலும், மக்கள் விலக்கிவிட்டு காரசாரமாய் பேரம் பேசுகிறார்கள்.

எட்டு மணிக்கு ஹோட்டலின் மொட்டை மாடியில் ஒரு மினி கூட்டம்.  குர்ஜரி யாத்ரா கையேடு, வெண்ணிற குல்லா, ஜோல்னா பை தரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மினி அறிமுகம். சென்னையிலிருந்து மட்டுமல்ல பெங்களூர், மும்பை, பாட்னாவிலிருந்தும் நேரடியாக பரோடா வந்து குழுமியிருந்தார்கள். இம்முறை வயது வித்தியாசமின்றி 20 பிளஸ் முதல் 60 பிளஸ் வரை சகல ஏஜ் குரூப்புகளும் கலந்து கட்டின கூட்டணி.

32 மணி நேர ரயில் பயணம், வயிற்றை காய வைத்திருந்தது. வயிறு முட்ட ஒரு கட்டுக் கட்டியாக வேண்டும். ‘குஜராத்தி தாலி போயிடு, அதான் பெஸ்ட்’ என்று பத்ரி சிபாரிசு செய்திருந்தார். மூச்சு திணறத் திணற ஒரு சாப்பாடு. கிளம்பும்போதே சொல்லித்தான் அனுப்பிவைத்திருந்தார்கள், ஆனாலும் இனிப்பை இப்படியெல்லாம் கொட்டியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

வட குஜராத், கட்ச் உள்ளிட்ட பகுதிகளில் இதுதான் பிரபலமான தாலியாம். பெரிய பித்தளை தட்டில் ஏகப்பட்ட ஐட்டம். முதலில் மஞ்சள் நிறத்தில் டோக்லா வந்தது. இட்லியை சதுரமாக வெட்டி மஞ்சள், பெப்பர் சேர்த்து, எண்ணெயில் பொரித்தது போல் இருந்தது. கூடவே தொட்டுக்கொள்ள இனிப்புச் சட்னி கொடுத்தார்கள். தள்ளி வைத்துவிட்டு, பக்கத்திலிருந்த ஊறுகாய் பாட்டிலில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து, எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி… சரி,சரி வேண்டாம்!

IMG_20140126_204137

பக்ரி என்னும் கோதுமையில் செய்யப்பட்ட இனிப்பு ரொட்டி. அதில் கொஞ்சம் வெல்லமும், நெய்யும் ஊற்றிக்கொடுத்தார்கள். இரண்டாவது ரவுண்டை தாண்டுவதற்குள் வயிற்றுக்குள் யாரோ கையை விட்டு பிசைவது போல் இருந்தது.  நல்லவேளை சூடான மொறு மொறு பூரியும், சுவையான பருப்பும் வந்துவிட்டன. கூடவே தேப்லா, பூடா என்றெல்லாம் விதவிதமான பெயர்களில் சைட் டிஷ். காதி என்றொரு மோர்க்குழம்பு கிடைத்தது, புளிக்கும் என்று நினைத்தேன், ரொம்பவே இனித்தது.

பூரி, ரொட்டி, புல்கா ரொட்டி என்றெல்லாம் விதவிதமான பெயர்களில் சூடாக கொடுத்தாலும் எல்லாவற்றிலும் கோதுமையும், அதன் இனிப்பும் எட்டிப்பார்க்கிறது. பாத் கேட்டதும் பிரைடு ரைஸ் வந்தது, ஆனால் அதிலும் கேரட், பிட்ரூட் எல்லாம் கிடந்து இனிப்போ, இனிப்பு. தூத் பாக் என்றொரு ஐட்டம் இருந்தது. வேறு ஒன்றுமில்லை, நம்மூர் அரிசிப் பாயசம்தான்.

கிளைமாக்ஸாக கிச்சடி வந்தது. கிச்சடி என்றால் நம்மூர் கிச்சடி அல்ல, குஜராத் பொங்கல்.  அரசியோடு, உளுந்து சேர்த்து பொங்கி, கூடவே மஞ்சள் சேர்த்து கொண்டு வந்திருந்தார்கள். நெய் சேர்த்து நான்கு மிளகு, கறிவேப்பிலையை தட்டிப் போட்டிருந்தால் சாட்சாத் அது பொங்கல்தான். எந்த சைட் டிஷ்ம் சிக்கடியோடு ஒத்துப்போகாமல் கடைசியாக ஊறுகாயை கையில் எடுத்தேன். அபாரமான காம்பினேஷன்.

ஹோட்டல் அறையில் நண்பர் விஸ்வநாதனை சந்தித்து பேசமுடிந்தது. ஏஜிஎஸ்ஸில் பணிபுரிகிறார். பெரும்பாலான நேரம், பஞ்சகச்சத்தோடுதான் உலா வந்தார். சென்னையிலிருந்து கிளம்பி, மும்பை சென்று, அங்கிருந்து வேறு ரயிலில் எங்களுக்கு முன்னதாகவே வந்து சேர்ந்துவிட்டார். முன்னரே ஏற்பாடுகள் ஏதும் செய்யாத திடீர் பயணம். குர்ஜரி யாத்ராவுக்கு பின்னர் உஜ்ஜயினி, துவராகா, சோம்நாத் என்று இன்னொரு வாரம் பயணத்தை தொடரப்போவதாகச் சொல்லி அசரடித்தார்.  பின்னர் சொல்லிய வண்ணம் செய்யவும் செய்தார்.

‘யாரு ஸார்… உங்க ரூம்மேட்’ என்று கேட்டேன்.

‘யாரோ முரளி கிருஷ்ணாவாம், இனிமேதான் வரப்போறாராம்’ என்றார்.

முரளி கிருஷ்ணாவா…அவருக்காக வெயிட்டிங்கா? சீட்டின் நுனிக்கே வந்துவிட்டேன்.

‘நீங்க கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு படுங்க ஸார்.. அவருக்காக வெயிட் பண்ண வேணாம்’

‘இல்லை.. எனக்கு தூக்கம் வராது.. கதவு திறந்தே இருக்கட்டும்’ என்றார்.

அறைக்கு திரும்பிவந்து படுத்துக்கொண்டேன். சக ரூம் பார்ட்னர் முத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.  எப்போது தூங்கினேன் என்று நினைவில்லை. அதிகாலை இரண்டரை மணிக்கு விழிப்பு வந்து, எழுந்து பார்க்கும்போது விஸ்வநாதன் ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது.

கதவு திறந்தே இருந்தது. விஸ்வநாதன் தரையில் உட்கார்ந்தபடி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். பக்கத்து படுக்கையில்  தலையிலிருந்து கால்வரை போர்வையால் மூடியபடி ஒரு உருவம் அசந்து தூங்கிக்கொண்டிருந்தது.

தல…எங்க தல!

1 2 3 4 5 86 87